பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், வெறுமனே 50 ரூபாவை மட்டும் வழங்க இணக்கம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனமாக 1000 ரூபாய் வழங்கப்படாத நிலையில், அது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்கம் மீது தமது அதிருப்தியை வெளியிட்டது.
இதனை அடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்க தரப்பினருடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உறவு குறித்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, அடிப்படை வேதனத்துடன் மேலதிகமாக, 50 ரூபாயை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேயிலைச் சபையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை யோசனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நிவாரண நிதி, எதிர்வரும் ஒரு வருடக் காலத்திற்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரண நிதிக்கென, தேயிலை சபையின் நிதியிலிருந்து 1.2 பில்லியன் ரூபாய் கடன் அடிப்படையில் ஒதுக்கப்படவுள்ளது. இந்த கடன் தொகை பின்னர் அரசாங்கத்தினால் தேயிலை சபைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படவில்லை. அத்துடன், தொழிலாளர்கள் எதிர்க்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானத்தை அடுத்து மலையகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment