Friday, February 8, 2019

4 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிக்கு பிணை.

கடந்த நான்கு வருடங்களாக, அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை, கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம், ரொக்கப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அதிகரித்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பப் பெண் சார்பாக, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த பிணை மனுக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு தாயான திருமதி ரவீந்திரன் மதனி என்ற 31 வயதான இளம் குடும்பப் பெண், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி, பயங்கரவாத விசாரனை பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் வெலிமடை காவல்துறையினரால், பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இவருக்கெதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இவருக்கு எதிராக தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ், பயங்கரவாத வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும், இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு, கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன், இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணைகள் தாமதமாகின.

எனினும் இந்த அரசியல் கைதியினை கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில், முன்னிலைப்படுத்திய போது, இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் முன்னிலையாகி இருந்ததுடன், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி.ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில், ஆளுனர் சபையைச் சேர்ந்தவர்களும், இந்த அரசியல் கைதியின் நலன் கருதி, மன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

இதன் போது குறித்த அரசியல் கைதியான பெண்ணை, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையில் செல்ல, நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com