Friday, February 15, 2019

எதிர்வரும் 21 ஆம் திகதி, சி,வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் - நீதிமன்றம்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை, எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொல்லப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பா.​டெனிஸ்வரன் மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியிலிருந்து நீக்க வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து இவரது செயல்பாட்டை எதிர்த்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, பா.​டெனிஸ்வரன் மேன்முறையீடு மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதன்படி பா.​டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து, மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி, வட மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பி.​ டெனிஸ்வரன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, நீதிமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com