காணி விடுவிப்பும் காணாமல் ஆக்கப்பட்டோரும். 2009க்கு முன்னரும் 2009 இக்கு பின்னரும். தமிழ் நேசன்
30 வருடத்துக்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பலர் காணாமல் போனதும். காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் மறுக்கமுடியாத உண்மை.
ஆனால் 2009 க்கு பின் உருப்பெறும் இவ் ஆர்ப்பாட்டங்களும் கண்டணங்களும் 2009 க்கு முன் வன்னியிலும், யாழ்குடாநாடானது புலிகளது கட்டுப்பாட்டில் இருந்தபோதும் ஒருமுறையேனும் நடைபெறாதது ஏன்.
தனியார் காணிகளை ஆக்கிரமித்தே புலிகளது அத்தனை முகாம்களும் இருந்தன. புலிகளது கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுபவர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்து செல்பவர்கள் தங்களது சொத்துக்கள் அத்தனையும் புலிகளிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும்.
அவ்வாறு புலிகளிடம் ஒப்படைக்காமல் யாராவது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட உறவினர்களுக்கு வழங்கினால் அவ்வாறு வழங்கிய சொத்துக்களை அவ் வறுமைக் கோட்டிற்குட்பட்ட உறவினர் குடும்பத்திடம் இருந்து வலுக்கட்டாயமாக சொத்துக்களை புலிகள் பறிமுதல் செய்த சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.
இன்று காணி நில விடுவிப்புக்காக ஆர்ப்பரிக்கும் பல்கலைக்கழகமும், கண்டணம் தெரிவிக்கும் தேசியவாதிகளும், நீலிக்கண்ணீர் வடிக்கும் புலம் பெயர்ந்த தமிழரும், அன்று புலிகள் புலம் பெயர்ந்து சென்றவர்களிடம் சொத்துக்களை பறிமுதல் செய்யும்போதோ ! தனியார் காணிகளை ஆக்கிரமித்து முகாம்கள் அமைக்கும்போதோ ! கண்டனமோ, ஆர்ப்பாட்டமோ, செய்யாதது ஏன் ?
குறைந்தபட்சம். இதெல்லாம் ஒரு பிழையான செயற்பாடு என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா ?
அவ்வாறே கானாமல் ஆக்கப்பட்டோரும்.
மாற்றுக்கருத்தாளர்கள், மாற்றியக்க குடும்ப உறவினர்கள், புலிகளிடம் கேள்வி கேட்பவர்கள், கப்பம் கட்ட மறுப்பவர்கள், இயக்கத்துக்கு கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்திய இராணுவ காலத்தில் EPRLF இல் இருந்தவர்களையும் EPRLF ஆல் கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களையும் சரணடையுமாறு ஒலி பெருக்கிமுலம் புலிகள் அறிவித்ததைத்தொடர்ந்து தாய் தகப்பனோடு சரணடையச் சென்றவர்கள் அனைவரும் புதைக்கப்பட்ட சம்பவங்களை அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
அவ்வாறான புதைகுழிகளில் ஒன்றுதான் மன்னார் புதைகுழி என்ற தகவல் புலிகளின் ஊதுகுழல்களின் இருட்டடிப்பில் தென்படுகின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தவேளையில் A-9 பாதையால் சென்ற பலரை புலிகளது சோதனை சாவடியிலும், பேரூந்தை இடைநடுவே மறித்தும் இறக்கிசென்ற பலபேர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.
இன்று காணாமல் போனோருக்காக ஆர்ப்பரிக்கும் பல்கலைக்கழகமும், கண்டணம் தெரிவிக்கும் தேசியவாதிகளும், நீலிக்கண்ணீர் வடிக்கும் புலம் பெயர்ந்த தமிழரும், அன்று புலிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்காகவும், கைது செய்து கொண்டு சென்றவர்களுக்காகவும், மனைவியுடன் சென்று சரணடைந்தவர்கள் எங்கே என்றும், தாய் தகப்பன் கொண்டுசென்று ஒப்படைத்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்றும், கண்டனமோ, ஆர்ப்பாட்டமோ, செய்யாதது ஏன் ?
குறைந்தபட்சம், இதெல்லாம் ஒரு பிழையான செயற்பாடு என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா ?
இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகிறது.
அரக்க கூட்டம் சிங்கள இராணுவம் என்று கூறினாலும் அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் கண்டணங்கள் என்று செய்யும் அளவிற்கு ஜனநாயகம் இருக்கிறது.
புலிகள் எமக்காக போராடுகிறார்கள் என்று கூறினாலும் அவார்களுக்கு எதிராக பெரிய அளவில் ஆர்ப்பாட்டமோ ஊர்வலமோ செய்யாவிட்டாலும் குறைந்த பட்சம் சரி தவறு என்று வாய் திறந்து கூறும் அளவிற்க்குகூட சுதந்திரம் இல்லை.
சிங்களவனிடம் ஜனநாயக முறையிலாவது போராடலாம்.
எம்மவரிடம் வாய் திறந்துகூட பேசமுடியாத அடக்குமுறைக்குள்தான் இருந்தோம் என்ற உண்மையை ஒத்துக்கொண்டேதான் ஆகவேண்டும்.
0 comments :
Post a Comment