Wednesday, February 6, 2019

யுத்தகாலத்தில் ஏதிலிகளாக சென்ற 16 குடும்பங்கள், தாய்நாட்டிற்கு வருகை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக சென்றவர்களில், 16 குடும்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் தங்களது சொந்த விருப்பின் பேரில், எயார் லங்காவின் இரு விமானங்களின் ஊடாக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக, வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தாய்நாட்டிற்கு வரும் குடும்பங்கள், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், இதில் 15 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் இவர்களுக்கு இலவச பயணசீட்டும், ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாயும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாயும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனி நபருக்கு 5,000 ரூபாயும், குடும்பத்துக்கு 10,000 ரூபாயும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment