புதிய தலைமுறையினரையும், பாடசாலை பிள்ளைகளையும் போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித் திட்டமான ''கண்ணியமான பிள்ளைகள்'' நிகழ்ச்சித்திட்டம் மார்ச் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த புதிய கட்டிடம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை, பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டு செல்லும் கடத்தல் நடவடிக்கை தீவிரமாக நாட்டில் இடம்பெறுகிறது. அதனை தடுப்பதற்காக மாணவர்களை அறிவூட்டும் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று 'சுஜாத தருவோ' என்ற கண்ணியமான பிள்ளைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களும் ஜனாதிபதி அலுவலகமும் இணைந்து முப்படையினர் மற்றும் பொலிசாரின் பங்குபற்றுதலுடன், வைத்திய நிபுணர்கள் குழுவொன்றையும் இணைத்துக்கொண்டு மிகவும் நட்புறவுடன் 'சுஜாத தருவோ' திட்டத்தை நாட்டின் பிள்ளைகளுக்கு மத்தியில் கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment