11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில், கடற்படை சிப்பாய் கைது
வெள்ளை வேனில் வைத்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால், கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட 11 இளைஞர்களில், மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து, சித்திரவதைக்குட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதான நந்தபிரிய ஹெட்டிஹந்தி எனும் சிப்பாயே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
குறித்த விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, சட்ட மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும், வழக்கின் 12 சந்தேக நபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment