Tuesday, January 29, 2019

மன்னாரில் இராணுவம் வசமிருந்த, மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிப்பு - இராணுவம்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் ஒருதொகுதி காணிகள், இன்றைய தினம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளுக்கான உரிய ஆவணங்களை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக, இன்றைய தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் கையளித்துள்ளனர்.

மன்னார்-தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கீழ் இருந்த காணி, மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கீழிருந்த 16 ஏக்கர் காணிகள் என்பன இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் அதிகாரி பிரிக்கேடியர் சேனாரட்ன பண்டார மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படை பிரிவு அதிகாரி ஜேம திலகரட்ன ஆகியோர் குறித்த காணிகளுக்கான ஆவணங்களை மக்களிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை, தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவிக்கு கீழுள்ள மேலும் சில காணிகளும், இனிவரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளதாக, இராணுவ படைப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், தம்மிடம் குறிப்பிட்டதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கூறினார்.

இதன்படி, பேசாலையில் 11 ஏக்கர் காணிகளும், கூராய் பகுதியிலுள்ள 26 ஏக்கர் காணிகளும், ஜீவ நகரிலிள்ள 5.6 ஏக்கர் காணிகளும் அடுத்ததாக விடுவிக்கப்படவுள்ளன

இதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதன் பின்னர், குறித்த காணிகள் மக்கள் நலன் கருதி, உடனடியாக விடுவிக்கப்படும் என, தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி, எழுத்து மூலமாக சமர்ப்பித்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com