நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முன்னிலை.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இன்றைய தினம் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் உறுப்பினராக செயல்பட்ட காலகட்டத்தில், முதலீட்டு நிறுவனம் ஒன்றுடன் நாமல் ராஜபக்ச மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பிலேயே, இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாமல் ராஜபக்சவிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக, கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் பொருட்டு வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சஷி வீரவன்ச ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், அவர்கள் இதுவரை தமது திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
எனினும் இந்த வார இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment