Thursday, January 31, 2019

எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து கழிவகற்றல் திட்டமா? - புத்தளம் – அறுவைக்காடு மக்கள் கொந்தளிப்பு

புத்தளம் – அறுவைக்காடு பகுதி மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளபட்டு வந்த நிலமாக இருந்த நிலையில் குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவகற்றல் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். புத்தளம் அறுவைக்காடு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டித்து பலதரப்பட்ட வழிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன.

சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் அகற்றிய பின்னர் கைவிடப்பட்டுள்ள குழிகள் நிறைந்த பகுதியிலேயே புத்தளம் – அறுவைக்காடு காணியில் கழிவகற்றல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பகுதியை சூழவுள்ள சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் பல வருடங்களாக மக்கள் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மக்களது நலன் கருதி கடந்த
2015 ஆம் ஆண்டு குறித்த காணியில் இரண்டு ஏக்கர் வீதம் மர முந்திரிகை செய்கையில் ஈடுபட்ட மக்களுக்கு இந்த காணி பகிர்ந்தளிக்கப்பட்டு, காணிக்கான அனுமதிப்பத்திரம் அப்போதைய வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இந்த காணியை கழிவகற்றல் திட்டத்திற்காக தற்போதைய வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் வழங்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். அங்கிருந்த மரமுந்திரிகைகள் அழிக்கப்பட்டு தற்போது யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு மாத காலமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமது நிலை உள்ளதாக குறித்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக பல்வேறுபட்டவர்களுக்கு தெரிய படுத்தியும் அவர்கள் இன்னும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே மக்களின் ஆதரவோடு கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுப்போம் எனவும், பிற்காலத்தில் மக்களுக்கு இன்னல்கள் வருமாயின் மக்களின் நலனுக்கான பொறுப்பினை அமைச்சு ஏற்கும் எனுவும் பாட்டளி சம்பிக்க றணவக்கவின் பிரதானி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம், கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள் என பலரும் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்ககளை முன்னெடுத்து இருந்தார்கள். பல்வேறுபட்டவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்ககளின் போது கொழும்பு குப்பை புத்தளத்துக்கு வேண்டாம், குப்பைகளால் சூழலை மாசுபடுத்தாதே, உயிர் கொல்லும் கொடிய நோய்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்போம் போன்ற பல்வேறுபட்ட வாசகங்களை மக்கள் முழங்கி இருந்தார்கள்.

No comments:

Post a Comment