ஆளுநனரும் அதிகாரங்களும் - வை எல் எஸ் ஹமீட்
ஆளுநர் நியமனம்
சரத்து 154B மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது . சாதாரணமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் [154B(5)]. ஆனாலும் ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்கலாம். 154B(2)
அதேநேரம் 2/3 பெரும்பான்மை மூலம் குறித்த காரணங்களுக்காக ஆளுநரை நீக்கும்படி மாகாணசபை கோரலாம். 154B(4)
அதிகாரம்
ஜனாதிபதியைப்போன்று ஆளுநருக்கும் மாகாணசபையைக் கூட்டுகின்ற, ஒத்திப்போடுகின்ற ( to prorogue), கலைக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. 154B(8) ஆனால் முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கின்றபோது அவரது சம்மதமின்றி கலைக்க முடியாது. 154B(8). முதலமைச்சரின் சம்மதமின்றி கலைத்து நீதிமன்றத்தினூடாக மீண்டும் கூட்டப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.
நிறைவேற்றதிகாரம்
நிறைவேற்றதிகாரம் ஆளுநருக்குரியது. அவற்றை நேரடியாகவோ அல்லது அமைச்சர்களுக்கூடாகவோ அல்லது அதிகாரிகளுக்கூடாகவோ ஆளுநர் பாவிக்கலாம். 154C. ஆனால் அவ்வதிகாரங்களை அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம்தான் பாவிக்கலாம். 154F(1) ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.
இங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அதிகாரமளிக்கின்ற பிரதான சரத்துக்கள் இவை இரண்டுமே. இங்கு ‘ஆலோசனை’ என்று பாவிக்கப்படும் சொல் அறிவுறுத்தலே. அதன்பிரகாரம்தான் ஆளுநர் நடக்க வேண்டும். (உண்மையில் இது ஒரு Westminster மொடலாகும்.) 1972ம் ஆண்டு யாப்பில் நிறைவேற்றதிகாரம் இல்லாத ஜனாதிபதிக்கும் இதேபோன்ற வசனமே பாவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பாவிக்கப்பட்டால் அந்த விடயங்களில் அவர் நிஜத்தில் நிறைவேற்றுதிகாரம் அற்றவரே. நிறைவேற்றதிகாரம் அந்த ஆலோசனை வழங்குபவருக்கு யதார்த்தத்தில் போய்விடும். இந்திய ஆளுநனரின் அதிகாரமும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. [இந்திய யாப்பு- சரத்து163]
ஆனாலும் இலங்கை ஆளுநர் விதிவிலக்கான விடயங்களில் மாத்திரமல்ல, மேற்கூறிய சரத்துக்களின்படி நிறைவேற்றதிகாரமல்லாத, வெறும் றப்பர் ஸ்டாம்பாக இருக்கவேண்டிய விடயங்களில்கூட அவர் மிகவும் அதிகாரம் பொருந்தியவராகவே இருக்கின்றார். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
அதில் ஒன்று: சரத்து 154F(2) ஆகும். அதாவது 154F(1) இன்படி நிறைவேற்றதிகாரவிடயத்தில் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய இயங்க வேண்டும் ஆனால் அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட சில தற்துணிவு அதிகாரங்களில் அமைச்சரவையின் ஆலோசனையின்படி இயங்கத்தேவையில்லை; என்ற விதிவிலக்கு இருக்கின்றது. மேற்படி உப சரத்து இரண்டில் ஏதாவது ஒரு விடயத்தில் ஆளுநர் தனது தற்துணிவு அதிகாரத்தை பாவித்திருக்க வேண்டும்; என்றோ பாவித்திருக்கக் கூடாது; என்றோ அந்த அடிப்படையிலும் நீதிமன்றில் கேள்வி எழுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதே சரத்து இந்திய யாப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரத்து 163(2). ஆனால் தற்துணிவு அதிகாரத்தைப் பாவித்திரிக்க வேண்டுமா? இல்லையா? என்றுதான் கேள்வி எழுப்பமுடியாதே தவிர, இது தற்துணிவு அதிகாரமா? இல்லையா? என்று கேள்வி எழுப்புவதில் தடையில்லை.
இந்தியாவில் ஆளுநனர்கள் பொதுவாக மாநில நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஆனால் இலங்கையில் ஆளுநனரின் தலையீடு அதிகம். இதற்குக் காரணம் 154F(2) இல் இந்திய யாப்பில் இருப்பதற்கு மேலதிகமாக ஒரு வசனம் இருக்கின்றது. அந்த வசனம் “ இங்கு ஆளுநரின் தற்துணிவு அதிகாரமென்பது ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்திலிருந்து வருவதாகும் ;” என்பதாகும்.
19வது திருத்தம் வரும்வரை ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடுக்கும் நிலை இருக்கவில்லை. எனவே, ஆளுநர் தற்துணிவு அதிகாரம் என்று எதையாவது செய்தால் அதனைக் கேள்விக்குட்படுத்த, கட்டுப்படுத்த வழி இருக்கவில்லை. எனவே, மாகாணசபையின் வேண்டிய விடயங்களில் ஆளுநனருக்கு தலையிட முடிந்தது. இதனால்தான் கடந்த காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ‘ ஆளுநர் செய்ய விடுகின்றார் இல்லை; எல்லாவற்றிலும் தலையிடுகின்றார்’ என்ற முறைப்பாடு அதிகமாக இருந்தது.
இரண்டாவது: சரத்து 154B(2) இல் “ ஆளுநர் சரத்து 4(b) பிரகாரமே பதவி வகிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 4(b) தான் ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரத்தை வழங்குகின்றது. எனவே, “ ஜனாதிபதியின் பிரதிதியாகவே ஆளுநர் செயற்படுகின்றார். அவரது நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்திலிருந்தே பெறப்படுகின்றது.
எனவே, ஜனாதிபதிக்கு ஆளுநரின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கும் உத்தரவுகளை வழங்குவதற்கும் முடியும். அவ்வாறு உத்தரவுகள் வழங்கினால் அவ்வுத்தரவுகள் மாகாண அமைச்சரவைத் தீர்மானங்களை மேவும்;” என்று 13வது திருத்த வழக்கின் பெரும்பான்மைத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சுருங்கக்கூறின் மாகாண அமைச்சரவை என்ன முடிவுகளை எடுத்தாலும் ஆளுனர் தனது தற்றுணிவு அதிகாரம் என்ற பெயரிலோ அல்லது ஜனாதிபதியின் உத்தரவு என்ற பெயரிலோ வேண்டிய தலையீடுகளைச் செய்யமுடியும்.
பொதுச்சேவை
இவற்றிற்கு மேலதிகமாக மாகாணசபைகள் சட்டம் இல 42 of 1987 உம் பல அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குகின்றது. இதில் பிரிவு 32 மிகவும் முக்கியமானதாகும். இதன் பிரகாரம் மாகாண பொதுச்சேவைக்கான நியமனம், இடமாற்றம்போன்ற அனைத்து விடயங்களும் ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரங்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, பிரதம செயலாளர், மற்றும் அதிகாரிகளுக்கு delegate பண்ணுப்படலாம்.
மட்டுமல்லாமல் 1989 ம் ஆண்டைய 12ம் இலக்க சட்டத்தின்படி ஏதாவதொரு சட்டத்தில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டு அவ்விடயம் தற்போது மாகாணசபையின் கீழ் வந்தால் அந்த ‘ அமைச்சர்’ என்ற சொல் ‘ ஆளுநரை’ அல்லது அம்மாகாணத்தின் உரிய ‘அமைச்சரைக்’ குறிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதன்மூலம் அங்கும் ஆளுநரின் தலையீட்டுக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் ஆளுநர் தலையிட நினைத்தால் மாகாண அமைச்சரவை வெறும் பொம்மை, ஆளுனர் விட்டுக்கொடுத்தால் நிர்வாகம் செய்யலாம். ஆனால் புதிய யாப்பில் ஆளுநரை முதலமைச்சரின் அடிமையாக ஆக்குவதற்கு இடைக்கால அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.
மாகாணசபை கலைகின்றபோது
மாகாணசபையில் அமைச்சரவை இருக்கும்போதே இவ்வளவு அதிகாரமெனில் அவருக்கு அறிவுறுத்தல் வழங்க அமைச்சரவை இல்லாதபோது முழு அதிகாரமும் அவருக்குத்தான் என்பதை சொல்லித்தான் புரியவேண்டுமென்பதில்லை.
0 comments :
Post a Comment