Friday, January 18, 2019

வரவை செலவாக காட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர்! கணக்கறிக்கை தோற்கடிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் டிசம்பர் மாத கணக்கறிக்கையை சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் நேற்று (17) வியாழக்கிழமை நிராகரித்தார்கள்.

இக்கணக்கறிக்கையில் இருந்த தவறுகள் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நிதி குழு கூட்டத்தில் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் சுட்டி காட்டப்பட்டு இருந்தன. அதன்படி பிரதேச சபையின் பிக் அப் வாகனத்துக்கு நான்கு ரயர்கள் வாங்கிய 82,800 ரூபாய் செலவு திண்ம கழிவகற்றல் செலவுக்குள் போடப்பட்டு இருந்ததையும், இறைச்சி கடை, அங்காடி ஆகியவற்றின் 230,000 ரூபாய் குத்தகை வருமானம் செலவினத்தில் காட்டப்பட்டு இருந்ததையும் ஆட்சேபித்தனர். அவற்றை திருத்தி சரி செய்வார் என்று தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சமாதானம் சொல்லி இருந்தார்.

இந்நிலையில் சபையின் ஜனவரி மாத கூட்டம் பிற்பகல் ஆரம்பமானபோது கணக்கறிக்கையில் குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பதை பெரும்பான்மை உறுப்பினர்கள் கண்டு ஆட்சேபித்தனர். இதனால் இக்கணக்கறிக்கையை நிராகரிப்பதாகவும், தொடர்ந்து இக்கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு சபை அமர்விலும் தவிசாளரால் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகளை தவறாது முன்மொழிந்தும், வழி மொழிந்தும் வருகின்ற உறுப்பினர்களான த. மோகனதாஸ், ஜெயராணி ஆகியோர் மாதாந்த அறிக்கையை ஆதரிக்காமலும், எதிர்க்காமலும் நடுநிலை வகிப்பதாக அறிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முத்துலிங்கம் காண்டீபன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபாபதி நேசராசா, காரைதீவு மகா சபையின் ஆறுமுகம் பூபாலரட்ணம், இராசையா மோகன் ஆகியோருடன் பிரதி தவிசாளர் ஜாஹீர் அடங்கலான முஸ்லிம் உறுப்பினர்களும் இதை நிராகரித்து, திருத்தங்களை மேற்கொண்ட பின் கூட்டத்தை பிறிதொரு நாளில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் தவிசாளர் கூட்டத்தை முடிவுறுத்தி வருகின்ற 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment