Tuesday, January 15, 2019

நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய தினம் காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளைய தினம் இரவிலிருந்து வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காற்று அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காற்று அதிகமாக வீசும் போது, பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .அத்துடன்
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமென்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.

அதிக காற்றும் மழையும் பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்தொழிலாளர்கள், மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வழிமன்றலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment