Wednesday, January 16, 2019

அடுத்த தேர்தலில் மைத்திரிக்கே, இடம் வழங்கப்படும் – மஹிந்த ராஜபக்ச தீர்மானம்!

அடுத்து வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த, தமது தரப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன முன்னணியின் கட்சித் தலைவர்கள் ‘கை’ அல்லது ‘மொட்டு’ தவிர வேறு ஒரு சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் முழு ஆதரவு இருந்தால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை தாம் ஆதரிக்க தயாராக உள்ளதாக, ஜனாதிபதியின் சகோதரனான டட்லி சிறிசேனவிடம், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்றும், ஸ்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 4.2 மில்லியன் வாக்குகளும், பொதுஜன முன்னணியின் 1.5 மில்லியன் வாக்குகளும் இணைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி நிச்சயம் என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்து ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலே முதலில் நடைபெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment