Thursday, January 31, 2019

தேசிய தினத்தில் வழங்கப்படும் பொது மன்னிப்பில் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்வதாக அத்துரலிய ரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் ஞானசார தேரரை, எதிர்வரும் தேசிய தினத்தன்று ஜனாதிபதியினால் வழங்கப்படும் சிறைக் கைதிகளுக்கான பொது மன்னிப்பின் போது இணைத்துக் கொள்ளுமாறும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ௮ ம் திகதி
தீர்ப்பு அளித்திருந்தது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட ன.

இந்தக் குற்றச்சாட்டுகளிற்கு அமைய 19 வருட கால சிறைத்தண்டனையை விதித்த நீதிமன்றம், அதனை 6 வருடங்களில் கழிக்க வேண்டுமென நிபந்தனையளித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்குள் அத்துமீறி பிரவேசித்தமை, நீதிமன்ற செயற்பாடுகளில் முறையற்ற ரீதியில் தலையீடு செய்தமை, முறைப்பாட்டை வழிநடத்திய அரச சிரேஷ்ட சட்டத்தரணியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment