Wednesday, January 30, 2019

அண்ணனையும்,தம்பியையும் மூட்டிவிட்ட குமார வெல்கம.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்து விடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் கோட்டாபய ராஜபக்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி மேல் இலங்கையின் ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியற்றவராகி விட்டார். பொருத்தமான – வெற்றியை உறுதி செய்யக்கூடிய – நாட்டு மக்களின் மனதை வெல்லக்கூடிய ஒருவரை, ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச களமிறக்கினால் மட்டுமே, அவருக்கு வெற்றி கிடைக்கும்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தமது சகோதரருமான கோட்டாபய ராஜபக்சவை களமிறக்க, மஹிந்த ராஜபக்ச, முடிவெடுத்துள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில் கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் களமிறங்கினால், அவர் படு தோல்வியைச் சந்திப்பார். தமிழ் – முஸ்லிம் மக்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள மக்களிலும் 60 வீதமானோர் அவரை எதிர்ப்பார்கள்.

எனவே, மஹிந்த ராஜபக்ச, தனது முடிவை மாற்றியமைக்க வேண்டும். இல்லையேல் மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்து விடும்.

ராஜபக்ச குடும்பத்தில் மஹிந்தவே நல்லவரும், நேர்மையானவருமாவார். ஏனையவர்கள் ஊழல்,மோசடிகள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்கள். இப்படியானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் முழு நாடும் கொதிப்படையும்.

மஹிந்தவின் நல்ல குணத்துக்கு அவர் தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும். ஆனால், நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பங்காளிக் கட்சிகளும் ஒன்று கூடி பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com