Thursday, January 31, 2019

நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு, எதிராக மேன்முறையீடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான படைபுலனாய்வு பிரிவினரை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தீவிரமாக முயற்ச்சித்து வருவதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான படை புலனாய்வு பிரிவினரை விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து, ரவிராஜின் மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதிபதிகளான, தீபாலி விஜேசுந்தர, அச்சல வெங்கபுலி ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டிஆராச்சி சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்கு தனக்கு 2 மாதங்கள் கால அவகாசம் பெற்றுத்தர வேண்டுமென, பிரதிவாதியான பிரசாத் நீதிமன்றில் தெரியப்படுத்தினார்.

இதற்கமைய மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி எடுப்பதற்கு திகதி குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை ரவிராஜ் கொலை வழக்குக்கு அமைய, பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை ஜூரி சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்தமை சட்டத்துக்கு மாறான செயலென நடராஜா ரவிராஜின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுபரிசீலனை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த வழக்கின் பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்றத்தின் ஜூரி சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்து விடுதலை செய்யப்பட்டவர்களை குற்றவாளிகளாக அறிவிக்குமாறு, மனுதாரரான கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியான சஷிகலா ரவிராஜினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment