Monday, January 14, 2019

யாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.

குற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர்  இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் நாளை காலை 11 மணிக்கு விசாரணைகளுக்காக, குற்றத்தடுப்பு பிரிவிற்கு பிரசன்னமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினரால் தமக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக , யாழ்ப்பாண மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக தெரிவித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர், சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல் அநாமதேயமான முறையில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் நாட்டப்பட்டிருந்ததாக கூறினார்.

இந்த சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணிகளை தாங்கள் முன்னெடுத்த போது, சம்பவ இடத்திற்கு வந்த ஒரு குழு தாங்கள் ஒரு நிறுவனமென்றும், தாங்கள் சட்டவிரோதமாக இவற்றை அமைக்கவில்லை என்றும் கூறியதாக மேயர்  தெரிவித்தார்.

ஆனாலும் சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேபிள் கம்பங்களை அமைப்பதற்கு சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமென்று நாங்கள் தெரிவித்திருந்தோம். எனினும் குறித்த குழுவினர், நாங்கள் செய்வது தவறு என்றும், தாம் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் கூறியதாக யாழ்ப்பாண மாநகர மேயர் கூறினார்.

இந்த விசாரணைகளின் பிரகாரம் இமானுவேல் ஆர்னோல்ட் நாளைய தினம் முற்பகல் 11 மணிக்கு காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவிற்கு பிரசன்னமாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment