தனி நபரின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியலமைப்பை கொண்டுவர முடியாது - ரவி
தனி நபரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியல் அமைப்பை கொண்டு வர முடியாது என, மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கலை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு பம்பலப்பட்டி, வஜிர பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த ஆட்சியில் நாட்டில் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே எமக்கான வெற்றியாகும் என் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தவொரு தேர்தலுக்கும் இதுவரை அஞ்சியதே இல்லை என அவர் தெரிவித்தார். அதே போன்று அடுத்து வரப்போகும் தேர்தலிலும் தமது தரப்பே அமோக வெற்றியடையும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கட்சிக்குள் சில முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான விடயமே. அதனை பெரிதாக பேசி, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சில சூழ்ச்சிக்காரர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு கட்சி என்ற ரீதியில் பலமான நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி இருப்பதாக அவர் கூறினார். முதலில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுதான் இடம்பெற வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் கூட நாம் அதற்கும் நாம் தயாராகவே உள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் எமது வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும், புதிய அரசமைப்பு தொடர்பில் பல்வேறு இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
ஆனால், நாம் அனைத்து இன மக்களுக்காகவே புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவோம். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியல் அமைப்பை கொண்டு வர முடியாது என அவர் தெரிவித்தார்.
அத்துடன் எமக்கு எதிராக சில சூழ்ச்சிகள் இடம்பெற்ற போதிலும், அவை அனைத்தையும் நாம்
முறியடித்துள்ளோம். பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கவும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவையனைத்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.. அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே நாளில் நிவர்த்தி செய்துவிட முடியாது. மக்களின் நலனுக்காக சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்திலேயே, பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment