Wednesday, January 16, 2019

அங்குணுகொலபெலஸ்ஸ அதிகாரிகள் கைதிகளை தாக்கும் அதிர்ச்சி காணொளி

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் CCTV காணொளிக் காட்சிகளை சிவில் அமைப்புகள் இன்று ஊடகங்களுக்கு வழங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் CCTV கமராக்களில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்ததாக, சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. குறித்த காணொளியில் தாக்கப்படும் கைதிகள் விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்று சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். தம்மை பார்வையிட வரும் உறவினர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதைக் கண்டித்தே குறித்த கைதிகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கைதிகள் சிறைச்சாலை அத்தியட்சகரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். என்னால் எதனையும் செய்ய முடியாது, நீங்கள் பல்கலைக்கழக மாணவர்களைப் போன்று ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் என இதன்போது அவர் கூறியதாக எமக்கு தகவல் கிடைத்தது. சிறைச்சாலை அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்த விடயம் கைதிகளை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கும்படியே என்று சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிட்டார்.

மனிதநேயமற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்துமாறு கைதிகள் கோரியதாகவும் சுதேஷ் நந்திமால் சில்வா மேலும் தெரிவித்தார். இந்தநிலையில், நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவிற்கு, குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார்.

இவர்கள் குற்றவாளிகள் என்று அடையாளம் காணும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உரியது. அவ்வாறு இருக்கையில் எப்படி சிறைச்சாலை அதிகாரிகள் இவர்கள் மீது இவ்வாறானா தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்?


No comments:

Post a Comment