இலங்கையில் ஏற்பட்ட பல அரசியல் தாக்கங்களினால் 2018ஆம் ஆண்டில் தெளிவானதொரு அரசியல் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கெதிரான உலகளாவிய கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி, 180 நாடுகளில் இலங்கை 89வது இடத்திலும் தென்னாசியாவில் 3வது இடத்திலும் உள்ளது. இது உலகளாவிய தரப்படுத்தலில் 25வது இடத்திலுள்ள பூட்டான் மற்றும் 78ஆவது இடத்திலுள்ள இந்தியா ஆகிய நாடுகளையும் விட பின்தங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஊழலுக்கெதிராக செயற்படுவதாக உறுதியளித்த போதிலும், ஊழலுக்கெதிரான செயற்பாடுகளில் ஓர் தளம்பல் நிலையிலேயே உள்ளது. இது 2013ம் ஆண்டிலிருந்து CPI சுட்டியில் 36 ற்கும் 38ற்கும் இடைப்பட்ட தளம்பல் நிலையையே காட்டுகிறது.
இதேவேளை TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர 2018ம் ஆண்டின் CPI பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
பொதுத்துறையில் ஊழல் அதுபற்றி கையாளக்கூடிய சட்ட பொறிமுறை உரிய நேரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான, விருப்பு அல்லது செயன்முறை என்பவை இலங்கையைப் பொறுத்தவரை பின்னடைவையே காட்டுகிறது.
சகல பொது அதிகார சபைகளும் பக்கச்சார்பின்றியும் சுதந்திரமாகவும் செயற்பட வேண்டியது அவசியம். சட்டத்தைப் பயன்படுத்தும் போது பக்கச்சார்பாகவோ அரசியல் நோக்குடனோ செயற்படின், அது ஊழலுக்கெதிரான பொறிமுறைக்கும் நீதி முறை கட்டமைப்புக்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர கூறினார்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் குறிப்பிட்டதன்படி, ஒரு நாட்டில் நிலவுகின்ற ஊழல் மட்டத்திற்கும், அந்நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்திற்குமிடையில் தொடர்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முழுமையான ஜனநாயகமுள்ள நாடுகள் அண்ணளவாக 75 புள்ளிகளை CPI யில் பெற்றதுடன், ஓரளவு ஜனநாயகம் உள்ள நாடுகள் அண்ணளவாக 49 புள்ளிகளையு,ம் கலப்பு முறையை கொண்ட நாடுகள் 35 புள்ளிகளையும், எதேச்சாதிகாரமான ஆட்சியுள்ள நாடுகள் 30க்கு குறைவாகவும் பெற்று CPI யில் இடம்பெற்றுள்ளது.
CPI பெறுபேறானது இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு சரிந்து போகும் ஜனநாயகம் மற்றும் கலப்பு ஆட்சிக்கான போக்கை காட்டுகிறது.
ஊழலுக்கெதிராக செயற்படுவதற்கும் உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சகல அரசாங்கங்களையும் பின்வருமாறு கோரியுள்ளது.
01 - அரசியல் ரீதியிலான அதிகாரத்திலிருந்து நடுநிலையாக செயற்படுவதற்காக நிறுவன ரீதியான வலுவூட்டலும், அச்சுறுத்தலின்றி செயற்படுத்துவதையும் உத்தரவாதப்படுத்தல்.
02 - ஊழலுக்கெதிரான சட்டம் அதன் பயன்பாடு நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் உள்ள இடைவெளியை நீக்குதல்.
குறிப்பாக உள்ளூர் மட்டத்தில் அரசியல் செயற்பாடுகள் மற்றும் அரசாங்க செலவீனங்களை கண்காணிக்கும் சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டல்.
03 - சுதந்திரமான ஊடங்களுக்கு ஆதரவளித்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் அல்லது தொந்தரவு இல்லாமல் பணியாற்றும் நிலையை உறுதிப்படுத்தல்.
No comments:
Post a Comment