Friday, January 11, 2019

யாழில் கருத்துக்களால் களமாடுவதாயின் எதற்கு வித்தியாதரன்?

கடந்த கால வன்செயல் கலாச்சாரத்திற்கும் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என வெளிக்காட்ட முற்பட்டுள்ளனர் தமிழரசுக் கட்சியினர். அந்த வகையில் புலிகளின் வன்செயல்கள் மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்பு தொடர்பில் அக்கட்சியின் புதிய தலைமுறை வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நாளை 12ம் திகதி 'கருத்துக்களால் களமாடுவோம்' எனும் தலைப்பில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசியல் ஆர்வலர்கள் எனப் பெயர் குறிப்பிடுவோரால் நிகழ்த்தப்படவுள்ள இக்கருத்தரங்கில் தமிழரசுக் கட்சியின் இளைய தலைமுறையினர் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் என்னும் கருப்பொருளில் சிவில் சமூகப் பிரமுகர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன் இறுதியில் மேற்படி வாதப்பிரதிவாதங்களுக்கு பதிலுரைக்கவுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்.

மேற்படி கருத்தாடல் சிறப்பானதானாலும், பேச்சாளர்களில் ஒருவராக அரசியல் அநாதையாக அலையும் வித்தியாதரனும் உள்வாங்கப்பட்டுள்ளார். புலிகளின் வன்செயல் கலாச்சாரத்தை ஆதரித்தும், புலிகளின் கொலைகளை நியாயப்படுத்தியும், ஜனநாயக மறுப்பை மேற்கொண்டு புலிகளை தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என எழுதி வந்த வித்தியாதரனால் எவ்வாறு கருத்துக்களால் களமாடவேண்டும் என்ற கருத்துக்கு வலுவூட்ட முடியும்.

எனவே கருத்துக்கள் வலுப்பெறவேண்டுமாக இருந்தால், ஊடகங்களை தமது கையில் வைத்து கருத்துச் சுதந்திரத்திற்கு சாவு மணியடித்த வித்தியாதரன் போன்றோர் அரசியல் , சமூக பரப்பிலிருந்து தூக்கி வீசப்படவேண்டும்.


No comments:

Post a Comment