தீர்வின்றி நீண்டு வரும் குளவிக் கொட்டு பிரச்சினை - இன்று ஒருவர் பலி.
தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனும், மனைவியும் தங்களது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, அவர்களை குளவி கொட்டியுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட கணவனும், மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் என்ற 72 வயதானவரே, இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக மலையக பகுதிகளில் குளவி கொட்டுக்கு இலக்காகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன. எனினும் இந்த பிரச்சனைக்கு இதுவரை எந்தவித தீர்வையும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை.
இதேவேளை கடந்த தினத்தில், பண்டாரவளை - எல்ல - பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், குளவி கொட்டுக்கு இலக்கான 70 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், அருகிலுள்ள குளவி கூடொன்று கலைந்து, மாணவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் தெமோதர மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இது போன்ற பல சம்பவங்கள், மலையக பகுதிகளில் அதிகமாக பரவி வருகின்றன. இந்த குளவிக் கொட்டால், அதிகமாக பெருந்தோட்ட தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுடன் சேர்த்து, பாடசாலை மாணவர்கள், வழிப்போக்கர்கள் என அனைவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது, எமது வேண்டுகோளாகும்.
0 comments :
Post a Comment