நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தைப்பொங்கல் பண்டியை முன்னிட்டு பல கொண்டாட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தலைநகர் கொழும்பில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் இன்றைய பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கலை பொங்கி மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து, பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடியுள்ளனர்.
அத்துடன் மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, மன்னார் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றமை இங்கு சிறப்பம்சமாகும்.
அதேபோன்று வவுனியா மாவட்டத்திலும், மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் இணைந்து மிகவும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
கிளிநொச்சியில், முறிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் பொங்கல் நிகழ்வும் இன்று சிறப்பாக இடம்பெற்றது. தைத்திருநாளான இன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பொங்கலும் பகிரப்பட்டது.
இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் வீடுகள், வர்த்த நிலையங்கள் என பல பகுதிகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விசேட நிகழ்வில் படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மலையகத்தின் ஹட்டன், நுவரெலியா , கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. குறிப்பாக கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் விஷேட பொங்கல் நிகழ்வு நடைபெற்றதோடு, இதில் சர்வமத தலைவர்களும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். இதுதவிர நாட்டின் அனைத்து பாகங்களிலும் பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து நேயர்களுக்கு இலங்கை நெட் குழுமம் தமது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.
No comments:
Post a Comment