Thursday, January 17, 2019

எனது தனிப்பட்ட விடயங்களில் தலையிட வேண்டிய தேவை, எவருக்கும் கிடையாது - கோட்டாபய ராஜபக்ஸ.

நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக் கொள்வதும், நீக்கிக் கொள்வதும், தனது தனிப்பட்ட விடயம் என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரஜாவுரிமை குறித்து பல தரப்பினர் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஸ, தமது தனிப்பட்ட விடயங்களில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

தமது பிரஜாவுரிமை குறித்து கருத்து வெளியிட்டவர்கள் மீது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விசாரணைகளுக்காக இன்றைய தினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இன்று முற்பகல் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றதில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

இதனை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஸவிடம், ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய போதே, அவர் இவாறு கூறினார்.

”பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனை கட்டிவைக்க முடியாதுதானே? ஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை கட்டிவைக்க மாட்டார்கள்'' என கோட்டாபய ராஜபக்ஸ கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இது சம்மந்தமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். ஆனால், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது என்பது இலங்கை அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாவும் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்தால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறி வரும் நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஸவும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

இதனிடையே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்க, இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளவர் என்ற காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com