Monday, January 14, 2019

புதிய அரசியலமைப்புக்கு, ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு காணப்படுகிறது - உண்மைகள் மறைக்கப்படுகின்றது தவராசா

புதிய அரசியல் அமைப்பு குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு காணப்படுவதாக, முன்னாள் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தமது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே, சி.தவராசா இதனை கூறினார். புதிய அரசியலமைப்பு
உருவாக்கச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் காணப்படுகின்றன. எனினும் அதனை பற்றி ஐக்கிய தேசிய கட்சியினர் கருத்து வெளியிடாது மூடி மறைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள், நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. அதிலும் அரசியல் தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக சி.தவராசா கூறினார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர்களின் அறிக்கைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினரே எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி இருப்பதாகா அவர் கூறினார்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய வரைபாக இல்லாவிட்டாலும், அதில் இன்னும் எமக்குத் தேவையான சில சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன.

இந்த விடயம் குறித்து எமது மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளதாக கூறிய தவராசா, அந்த உண்மையைச் சொல்வதற்கு புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும் தயங்கி வருவதாக கூறினார்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் அமைப்பு குறித்து அதிக கரிசனை கொண்டிருப்பது மக்களை ஏமாற்றவே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment