Tuesday, January 29, 2019

ஜூன் மாதத்துக்கு முன்னர், மாகாண சபை தேர்தல் இடம்பெறும் - அமைச்சரவை அனுமதி.

இந்த வருடம் ஜூன் மாதத்திற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை முன்னர் நடத்த, அமைச்சரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்திருந்த நிலையில், இன்று இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில், ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் அவை அனைத்தும் தற்போது இயங்கி வருகின்றன.

இதேவேளை மாகாண சபை தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நடத்தவில்லை என்றால், தாம் பதவி விலகப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று கருத்து வெளியிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடத்துவதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து ஆரம்ப காலங்களின் சிறுபான்மை தேசிய கட்சிகளுக்கும், பெரும்பான்மை கட்சிகளுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

எனினும் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. பெரும்பாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்தக் கோரி, ஆரம்பத்தில் பல சிறுபான்மை தேசிய கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

முன்னதாக அமைச்சர் பைசர் முஸ்தபா புதிய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைப்பாட்டை எட்டியிருப்பதாகவும், சுதந்திரக்கட்சியும் அதனையே விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் புதிய முறைமையில் நடத்தவதற்காக செய்யப்பட்ட எல்லை நிர்ணய செயற்பாட்டில் குழப்ப நிலைமைகள் காணப்படுவதால் அவற்றை திருத்தம் செய்வதற்கு காலத் தாமதம் ஏற்படும் என்பதால், பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சிறுபான்மை தேசிய கட்சிகள் கோரியதால் அது தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று
நியமிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல், பழைய முறையிலேயே நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment