இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கு, மேலும் கால அவகாசம் தேவை என இலங்கை தேசிய சமாதானப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம், தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமாயின், அது நல்லாட்சிக்கான வழிகோலாக அமையும்.
அத்துடன் இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்வதற்கும் பெரிதும் உதவும்.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கும், இந்த கால அவகாசமானது துணை புரியும் என
தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு குறித்த முன்னெடுப்புக்கள் மந்த கதியிலேயே உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிட்டிருந்தது.
கடந்த முறை இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் பல, இன்னும் நிறைவேற்றப்படாமலும், சில மந்த கதியில் நிறைவேற்றப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்து இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை குறித்து இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment