Tuesday, January 15, 2019

சதொச நிறுவனத்தின் போலி முகாமையாளர் பிணையில் விடுதலை

போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் சேவையாற்றி வந்த விற்பனைப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கோட்டை மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர் எதிர்வரும் 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இதன்போது நீதவான் அறிவுறுத்தியுள்ளார். சந்தேக நபரான இவர் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் சேவையாற்றி வந்த நிலையில், கொழும்பு இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தாம் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவித்து குறித்த பதவியை வகித்து வந்துள்ளார். இந்த வேலையை பெறுவதற்கு போலி ஆவணத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே போலி சான்றிதழ்களை பலர் சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் பலர், பதவி நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சதொச நிறுவனத்தில் சிரேஷ்ட முகாமையளர்களாகவும் பிரதி பொது முகாமையாளர்களாகவும் செயற்பட்டவர்களே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு பதவி நீக்கப்பட்டவர்கள் தாம் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்றதாக போலி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com