எமது ஜனாதிபதி வேட்பாளர் தயார் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!
அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்து விட்டதாக, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர் மொட்டுச் சின்னத்தை அங்கத்துவப்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில், அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினர், கேள்வி எழுப்பி வந்த நிலையில், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது எமது வேட்பாளரின் குடியுரிமைப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தில் ஏறிய காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தான் இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து வழிநடத்திச் சென்றார். அந்த வகையில், இந்த அரசியல் போராட்டத்திற்கு உரிய தரப்பினர் உரிய நேரத்தில் களமிறங்குவர்.
எம்மிடமுள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது வேட்பாளர் தொடர்பில் இப்போது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் குடியுரிமை இருப்பதால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பஷில் ராஜபக்ஷவுக்கும் போட்டியிட முடியாது என்று கூறுகிறார்கள். இதனை அடுத்து எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாடு முழுதும் அதிக கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், எமது தரப்பின் குடியுரிமைப் பிரச்சினையும், வேட்பாளர் பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன. எனினும் யார் வேட்பாளர் என்று இப்போதே நாம் கூற மாட்டோம். யார் சரியான நபரோ, அவர் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படுவார் என, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, தற்போது மௌனம் காத்து வருகின்றது. எனினும் பல்வேறு தரப்பினர் தற்போதைய வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பரிந்துரைத்து வருகின்றனர். இதேவேளை அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாச பதவி ஏற்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், பல செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
எனினும் ஐக்கிய தேசிய கட்சி, தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தோ, அடுத்த தேர்தல் குறித்தோ இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment