Monday, January 7, 2019

ஏப்ரலில் ஆரம்பம் அறிவித்தார் அர்ஜுன்

மாத்தறை - பெலியத்தைக்கு இடையிலான புகையிரத சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த புகையிரத பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நேற்று வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெற்றது. இதில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி கூறினார். மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புகையிரத பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களாக அமையப்பெற்றுள்ளது.இதன் முதற்கட்டப் பணியாக 26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பாதை, மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக 278 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன எக்ஸின் வங்கி வழங்கியது.

இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் புகையிரத பாதை அமைக்கப்படவுள்ளது. மாத்தறை – பெலியத்த பாதையே இலங்கையில் மிக நீளமான சுரங்க புகையிரத பாதையாக அமைகின்றது . சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 மீற்றர் நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் மேலும் சில ஏற்பாடுகளாக, பல உப புகையிரத நிலையங்களும் இதில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மாத்தறைக்கும் கெக்னதுறவுக்கும் இடையில் ஒரு கிலோமீற்றர் தூரம் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com