நாடாளுமன்றம் தீர்மானிக்கவேண்டாம் - மக்கள் முடிவெடுக்கட்டும் - அனுரகுமார
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, 20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு உரித்தான நிறைவேற்று முறையினை நீக்கும்20 ஆம் திருத்தச்சட்டம் குறித்து, பிரதமர் தனது அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பிரதமர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட இன்றைய நிலையில் ரணில் விக்கிரமசிங்க 20 ம் திருத்த சட்டம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என்று நாடாளுமன்றில் நாம் அழுத்தம் கொடுக்கவுள்ளோம்.
20 ஆம் திருத்தச்சட்டம், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று அதன் அறிவுறுத்தல்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, குறித்த அறிவுலுத்தல்களில் அவதானம் செலுத்தி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் தொடர்சியாக நாடாளுமன்றில் பெரும்பான்மையைப் பெற நாம் முயற்சிப்போம். இந்த விடயத்தை செயற்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் நல்லது என்றே நாம் கருதுகிறோம். மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை இதனூடாக நாம் அறிந்து கொள்ளமுடியும். அத்துடன் வெறும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்காமல், மக்கள் ஆணைக்கு வழிவிட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குங்கள் என்று, ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment