அடுத்த முறையும் யானையின் முதுகிலேயே பயணம். மொட்டு மலராது என்கிறார் வேலுகுமார்.
அடுத்த தேர்தலில் தனிக் கட்சி அரசியலை விடுத்து, தோழமைக் கட்சிகளுடன் இணைந்தே புதிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்ப்பதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இணைந்து பயணிப்பதன் மூலமாகவே அர்த்தமுள்ள, நீடித்து நிலைக்கக் கூடிய ஆட்சியை கொண்டு நடத்த முடியுமென, அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் கண்டி - திகன பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட போதே, வேலுகுமார் இதனை கூறினார்.
அரசியல் சூழ்ச்சி செய்து நாட்டின் அதிகாரத்தை தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என மஹிந்த தரப்பினர், பெரிதும் முயற்சி செய்தனர். எனினும் நாட்டின் நலன் கருதி, பங்காளிக்க கட்சி உறுப்பினர்கள் இரவு-பகல் பாராமல் எமக்காக அயராது உழைத்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் இருந்த அனைத்து பங்காளி கட்சிகளும், பணத்தை பார்க்காமல் ஜனநாயகத்திற்கே முன்னுரிமை வழங்கின. இது உண்மையில் நாட்டுக்கே கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி, யாரிடமும் சென்று கெஞ்சித்தான் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற தேவைப்படும் இல்லை.
இங்கு கட்சி அரசியலுக்கும் அப்பால், நாட்டில் நல்லாட்சியொன்று மலர வேண்டும் என்பதற்காகவே மக்கள், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தனர். 19 ஆம் சீர்திருத்தத்தை கொண்டு வந்ததன் பின்னர், அமைச்சரவை 30 ஆக குறைக்கப்பட்டது. ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது என தெரிவித்த வேலுகுமார், இதை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் எதிர்வரும் தேர்தலில் பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே, ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்த்துள்ளதாக வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment