கருணாவின் திருமணம் வன்னியில் பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் ஒரு கொலையை கொண்டாடும் பொருட்டு அங்கிருந்தவர்களுக்கு ஐஸ் கிறீம் பெட்டி ஒன்றை கொடுத்ததாக பிள்ளையானால் எழுதப்பட்டுள்ள வேட்கை என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்புத்தகத்தில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நான் 1993ஆம் ஆண்டுதான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் சென்றேன். பின்னர் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி,வன்னி பிரதேசங்களிலும் நான் பல வருடங்களை கழித்துள்ளேன். கருணாம்மானின் திருமணம் கூட இங்குதான் நடைபெற்றது. அப்போது நான் கருணாம்மானுக்கு நெருங்கிய அணியில் இருந்தேன். அவரது கட்டளையின் கீழியங்கும் பல வேலைகளை மேற்பார்வைசெய்வதும் எனது பணிகளில் ஒன்றாயிருந்தது. அந்த வேளையில்தான் கருணாம்மானின் திருமணம் நடைபெற்றது. கிழக்குபோராளிகளை ஒருங்கிணைத்து ஜெயந்தன் படையணி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களின் பின்னரே அம்மானின் திருமணமும் இடம்பெற்றது என்பது ஞாபகம்.
தலைவர் தலைமையில் அவரது கையாலே தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடைபெற்றது. எல்லோருக்கும் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது. தலைவர் பிரபாகரனும் பொட்டம்மானும் ஏனைய தளபதிகள் அனைவரோடும் இருந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அவ்வேளையில்தான் பொட்டம்மானுக்கு செய்தி தொடர்பு ஒன்று வந்தது. அவர் சற்று வெளியேறி தகவலறிந்து கொண்டு வந்து தலைவரின் காதுக்குள் ஒரு இரகசிய செய்தி சொன்னார். பின்னர் அவரே ஐஸ் கிரீம் கப்புகள் நிறைந்த பெரியதொரு தட்டினை தூக்கிக்கொண்டு எங்களிடம் வந்தார்.
"இன்று ஒரு சந்தோசமான நாள் தேவையான ஐஸ் கிரீம் சாப்பிடுங்கோ" என்கிறார். நானும் மேலதிகமாக இன்னுமொரு ஐஸ்கிரீமை பொட்டம்மானின் தட்டிலிருந்து எடுத்துக்கொண்டேன்.
இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கரும்புலித்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது அதன்பின்னர்தான் தெரிந்தது. அது ஒரு மே தின நாள்.
No comments:
Post a Comment