தான் அரசிலுக்குள் பிரவேசித்த நேரம் மிக இக்கட்டானதொரு காலப்பகுதி எனக் கூறும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் உப தவிசாளரும் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான மதினி நெல்சன், அது ஆண்களே அரசியலுக்குள் நுழைய அச்சப்பட்ட காலம் என்கிறார். தினகரன் வார மஞ்சரிக்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு.
கேள்வி - உங்களைப் பற்றியும் உங்கள் அரசியல் பிரவேசம் குறித்தும் கூறுவீர்களா?
பதில் - நான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் இருந்தேன். அதன் பின்னர் முகாம்களுக்குச் சென்று மீள்குடியேற்றமாக யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறினேன். இக் காலப் பகுதியில் பெண்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தேன்.
போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட பெண்கள் மீதான அடக்குமுறைகள் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் காலப் பகுதியில் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாத தேவையாக இருந்தது.
அதன் பிரகாரம் பெண்களின்உணர்வுகள் பெண்களின் குரலாலேயே சொல்லப்பட வேண்டுமென்பதற்காக பெண் தலைமைத்துவத்தை வலியுறுத்தி பல போராட்டங்கள் எங்களால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறு பெண்களுக்காகவும் சமூகத்திற்காகவும் செயற்பட்டு வந்த நிலையில் அரசியலில் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராகச் செயற்பட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து இம் முறையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன்.
கேள்வி - அரசியல் பிரவேசத்தின் போதும் அரசியலுக்குள் நுழைந்த பின்னரும் பெண் உறுப்பினராக நீங்கள் எத்தகைய சவால்களை எதிர்நோக்கியிருந்தீர்கள்?
பதில் - நான் அரசியலுக்குள் பிரவேசித்த நேரம் மிக இக்கட்டானதொரு காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் அரசியலக்கு வருவதற்கு ஆண்களே அச்சம் கொண்டிருந்தனர்.
ஆனாலும் அந்தக் காலப்பகுதியில் அரசியலுக்கு வந்த நான் பல அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.
இப்பொழுதுபோல தேர்தல் களங்களில் பிரசாரங்கள் செய்கின்ற நிலைமை அப்பொழுது இருக்கவில்லை. சாதாரணமானதொரு பொக்கற் கலண்டரைக் கூட யாரும் வாங்கி வைத்திருக்க கூடிய நிலைமையும் இல்லை.
அந்தக் காலப் பகுதியிலும் மக்கள் தங்கள் வாக்குகளை மானசீகமாக வழங்கியிருந்தார்கள். ஆனால் எந்தவொரு எழுச்சியும் அத் தேர்தல் காலப் பகுதியில் இல்லை. அதே நேரம் தேர்தலில் போட்டியிடும் எங்களுக்கு பாரிய அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் இருந்தன. அதே நேரம் கூட்டமைப்பில் போட்டியிடுவதென்பது கூட அந்த நேரத்தில் பெரிய சவாலானதொரு விடயம் தான்.
கேள்வி -இத்தனை சவால்களையும் தாண்டி எவ்வாறு தொடர்ந்தும் அரசியலில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளீர்கள்?
பதில் – நாங்கள் அரசியலுக்கு வந்ததே அருவருப்பாக இந்தச் சமூகம் பார்த்தது. ஆனால் இப்பொழுது சமூகத்தின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியுள்ளது. எங்களுக்கு பக்க பலமாக இந்த சமூகம் இருப்பதை உணர்கிறேன்.
ஆனாலும் அரசியலில் அந்தந்த இடங்களில் பெண்களை கொண்டு வந்து விட்டாலும் பெண்களின் கைகளில் அரசியல் அதிகாரங்கள் செல்லுமானால் சில நேரம் அது தங்களுக்கு எதிர்மறையாக செயல்படலாம் என்ற பயமும், அரசியலில் தொடர்ந்தும் தங்களைத் தக்க வைக்க நினைப்பவர்களின் சிந்தனைகளிலும் உள்ளது.
ஆனாலும் அவ்வாறான மனநிலை ஆண்களிடத்தே இருக்கலாம் என்பது பெண்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இதனை நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக அல்லாமல் எல்லாப் பெண்களின் கருத்தாகவே நினைக்கிறேன். பெண்களிடம் அதிகாரங்களை வழங்கி அவர்களைத் தக்க வைப்பதால் தங்களின் வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் பறிக்கப்படலாம் அல்லது மறைக்கப்பட்டு தங்களின் திட்டங்கள் எதிர்காலத்தில நிறைவேற்றப்படாமல் போகலாம் என்ற எண்ணம் ஆண்களிடம் இருக்கலாம்.
மேலும் கட்சிகளின் எல்லைக்குள் பெண்களின் வகிபாகம் குறைவாகவே உள்ளது. தீரமானம் எடுக்கும் இடங்களில் பெண்கள் இல்லை.
கேள்வி - இவ்வாறான நிலைமகள் இருக்கின்ற போது எதிர்காலத்தில் பெண்களை அரசயிலுக்குள் கொண்டு வருவதற்கு விரும்புகிறீர்களா?
பதில் – கட்சிகளை விட பல தனியார் நிறுவனங்கள் பெண்களை வளப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன. அவர்கள் சக்தி மிக்கவர்களாகவும், தகுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதில் அரசசார்பற்ற நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.
அவ்வாறு பயிற்றப்பட்ட பல பெண்கள் வெளியில் வந்துள்ளனர். அவர்கள் தற்போது அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எதிர்காலத்தில் அரசிலுக்கு வரத் தயாராக இருக்கின்றனர். அப்படி எங்களுடைய அனுபவங்கள், அவமானங்கள், இழப்புக்கள் ஊடாக எப்படி நாங்கள் வளர்ந்து வருகின்றோம் என்பதை அவர்களிடத்தே பகிர்ந்து வருகின்றோம்.
அரசியலுக்கு பெண்கள் வருவது இப்போது சவாலான விஷயம் இல்லை. என்றே கூறகூடியதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் அந்தளவிற்கு தயார் நிலையில் இருக்கின்றார்கள். ஆனால் கட்சிகள் அவர்களை உள்வாங்குவதில்லைதான் ஆனாலும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் கட்டாயம் அரசியலில் பெண்களின் வகிபாகம் முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக தொடர்ந்து நாங்கள் உழைக்கின்றோம்.
கேள்வி – பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில் - வாக்காளர் விகிதம் என்று பார்க்கின்ற போது 52வீதமான வாக்காளர்களாக பெண்களாகவே இருக்கின்றனர். ஆகையினால் நாங்கள் முதலாவதாக விடுகின்ற பிழை என்னவெனில் ஒரு பெண்னுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை வெல்ல வைப்பதற்கு தவறுகின்றோம். ஆகவே அவர்களை வெல்ல வைப்பதே முக்கியமானது.
இப்ப பெண்களுக்கு ஒதுக்கீடு என்று உள்ளது. ஆனால் அந்த ஒதுக்கீட்டை நாங்கள் விரும்பவில்லை. நாங்களும் சரி சமனாக எல்லாத் தகுதிகளுடனும் தான் இந்த நாட்டில் இருக்கிறோம். ஆகையினால் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த ஒதுக்கிடு என்றதொரு கேள்வி எழுகிறது.
ஆனால் பெண்கள் இங்கு பிழை விடுகின்றனர். அவர்கள் சிந்தனையில் பதிந்துள்ளது. அரசியல் என்பது ஆண்களுக்கானது என்று தான். எனவே பெண்கள் அரசியலுக்கு வந்தால் எமது சமூகம் வேறு விதமாகப் பார்க்கும் என்று பெண்கள் கருதி, ஒதுங்கிக் கொள்ள முயல்கிறார்கள். அவ்வாறு தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு கொடுத்த வாய்ப்பை அவர்களும் சரியாகப் பயன்படுத்தவில்லை. பெண்கள் விடத்தில் கட்சிகளும் சரியானதொரு முடிவை எடுக்கவில்லை. அதே நேரம் வேட்பாளராக நிறுத்தப்படும் பெண்களுக்கு பெண்களே ஆதரவு தரவும் இல்லை. அது கட்சிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாகப் போய்விட்டது.
அதாவது நிறுத்தப்பட்ட பெண்களுக்கு பெண்களே ஆதரவு தராத நிலையில் நிறுத்துங்கள் என்று எப்படிக் கட்சிகளிடம் கேட்பது?
நாங்கள் விடுகின்ற முதலாவது பிழை தலைமைத்துவத்தை வளர்த்துவிடுவதில் அக்கறையின்றி இருப்பதுதான். இறக்கும் வரைக்கும் நாங்கள் தலைலைவர்களாக இருக்க விரும்புகின்றோமே தவிர அடுத்த தலைமையை வளர்த்துவிடுவதில்லை. அதனால் தொடர்ந்து ஒருவரே இருப்பதை விட ஏனையோருக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இதனை பெண்களாவது கொண்டு வர வேண்டும். அந்தப் பதவிகளில் தொடர்ந்து இருப்பதை விட வேறு வேறு ஆட்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும
கேள்வி – பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குமுறைகளுக்கு எதிராக நீங்கள் செயற்பட்டு வருவதாக அறிகிறோம்.....
பதில் - எமது நாட்டில் பாலியல் வன்முறைகள் வயது வேறுபாடற்ற செயற்பாடாக இருக்கிறது. கற்றலுக்கு மட்டும் தான் வயசில்லை என்று ஒரு காலத்தில் கூறினார்கள். இருந்தாலும் இந்தக் காலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் தான் வயசில்லை என்ற நிலைமை காணப்படுகிறது. அது சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.
இங்குள்ள அமைப்புக்கள் மற்றும் தெற்கிலுள்ளவர்களுடன் இணைந்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் பெண்கள் மீதான வன்முறைகள் குறைந்தாக இல்லை.
பெண்கள் அமைப்புக்களினூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்படுத்தி வருகின்றோம்.
கேள்வி–உங்களது சபையின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது. எத்தகைய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்?
பதில் - அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட எமது சபை அனைவரையும் இணைத்துப் பயணித்துக் கொண்டிருக்கிறது. பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயற்படுத்த தயாராக உள்ளோம்.
கேள்வி – சபையின் கழிவகற்றல் செயற்பாடு எவ்வாறு உள்ளது.
பதில் - மிக குறுகிய எல்லைப் பகுதியே எமது நகர சபைக்கு உள்ளன?. அதனால் கழிவகற்றலை மேற்கொள்வதில் பாரிய சவால்கள் உள்ளன. இன்றைக்கு எமக்கிருக்கின்ற நாளாந்த பிரச்சினை என்றால் கழிவகற்றல் தான். நகரை அண்டிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். அத்தகைய சவால்களைத் தாண்டியே செயற்பட்டு வருகின்றோம்.
No comments:
Post a Comment