Tuesday, January 8, 2019

வடமாகாண புதிய ஆளுநருக்கும், சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வட மாகாண ஆளுநராக பதவியேற்ற சுரேன் ராகவனின் முதலாவது இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும், அது குறித்து முதற்கட்டமாக எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம். ஏ சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு, அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக, ஆளுநரின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment