தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஊடகங்களை தவறாக விமர்சித்து வருவதாக, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, வை.தவநாதன் இதனை கூறினார்.
தமிழரசு கட்சி யுத்த காலத்தினைப் போன்றே தற்போதும் செயற்பட்டு வருகின்றது. தமக்கு சாதகமான கருத்துக்களை வெளியிடும் போது மௌனம் காப்பவர்கள், எதிர்மறையான கருத்துக்களை ஊடகங்கள் வெளிக்காட்டும் போது, அந்த ஊடகங்களுக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருவதாக வை.தவநாதன் குறிப்பிட்டார்.
உண்மையில் இவர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தால் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு அமைச்சுக்களை பொறுப்பேற்காது, அமைச்சுக்களை அடக்கி ஆளும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த எம்.ஏ. சுமந்திரன், சில தொலைக்காட்சி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன் இந்த கருத்தை முன்வைத்தார்.
No comments:
Post a Comment