Saturday, January 19, 2019

ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தை அடுத்து கிடைக்கவுள்ள மற்றுமொரு நன்மை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயத்தை அடுத்து, நாட்டின் அபிவிருத்திக்கான முக்கிய ஒப்பந்தங்கள் பல கைச்சாத்தானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்குவதக்கு நாட்டுக்கு குழுவொன்றை அனுப்ப பிலிப்பைன்ஸ் உடன்பட்டுள்ளது.

விஜயத்தின் இறுதி நாளான இன்று ஜனாதிபதி அந்நாட்டின் பொலிஸ் தலைமையக்கத்திற்கும், போதை பொருள் ஒழிப்பு பிரிவிற்கும் சென்று அங்குள்ள செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தினார். அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான கண்காட்சி ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இதன்போது பொலிஸ் சேவை பிரதானி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கான சிறந்த யுத்தம் ஒன்றை தனது தலைமையில் இலங்கையில் முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.

பூகோள முக்கியத்துவம் மிக்க இடத்தில் இலங்கை அமைய பெற்றமையால் போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு இலங்கை சாதகமாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நட்பு நாடுகளின் உதவியை போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக அழைப்பு விடுத்தார்.

சட்டவிரோத போதை பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்டிக்கோ டுடேர்டெவை பாராட்டிய ஜனாதிபதி, அவரது இந்த சேவையை பாராட்டும் முகமாகவே தான் பிலிப்பைன்ஸ் வந்ததாக தெரிவித்தார்.

உலக நாடுகள் போதை பொருள் கடத்தல் தொடர்பில் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், அரசியல்வாதிகளை இதில் சம்மந்தம்பட்டிருப்பதனால் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது போதை பொருள் நடவடிக்கையை ஒழிப்பதில் உள்ள பாரிய பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளால் எடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கை காரணமாக பொலீசாரும், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் உயிரிழந்த சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார்.

சட்டவிரோத போதை பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தில் வெற்றி கொள்வதற்கான முக்கிய பணியில்தான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி இந்த வருடமும் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டவிரோத போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ளும் பொலீசாரையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினர். இதன்போது ஜனாதிபதியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெவத்தவும் பங்கேற்றார்.


No comments:

Post a Comment