யார் நல்லது செய்தாலும் அவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் பாராட்டுகிறோம் என்ற போர்வையில் சந்தர்ப்பம் பார்த்து தங்கள் அரசியல் எதிரிகளை வஞ்சகம் தீர்ப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கிழக்குமாகான ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவியேற்றதன் பின்பு தனது ஆளுநர் பதவி மூலமாக கிழக்கு மாகாணத்தில் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பு செய்வதில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டுமென்று நான் கட்டுரை எழுதியிருந்தேன்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட மூவாயிரம் ஏக்கரில் இராணுவத்தினரிடமிருந்து 39 ஏக்கர் நிலங்கள் மட்டுமே 18.01.2019 தினத்தில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநராக பதவியேற்று இரண்டு வாரங்களும் பூர்த்தியாகாத நிலையில் இது எவ்வாறு சாத்தியமானது ?
இந்த காணி பிரச்சினையானது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல. இது தலைவர் அஸ்ரப் காலம் தொடக்கம் இருந்துவருகின்றது.
அன்றைய தலைவர் தொடக்கம் இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் வரைக்கும் முஸ்லிம்களின் காணிகள் விடுவிப்பு விடயத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளும், கோரிக்கைகளும், அழுத்தங்களும் வழங்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது.
ரவுப் ஹக்கீமினால் குறித்த பிரச்சினைக்குரிய பிரதேசங்களுக்கு காணி அதிகாரிகளை அழைத்துச் சென்று காண்பித்த விடயங்களையும் நாம் தொலைகாட்சி வாயிலாக பல தடவைகள் கண்டிருக்கின்றோம்.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இராணுவத்தினரை சாட்டிவிட்டு காலம் கடத்தி வந்தார்களே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான முன்வரவில்லை. இது ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.
கிழக்கு மாகான முஸ்லிம்கள் காலாதிகாலமாக இரண்டு சிங்கள பெருந் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு வழங்கி வந்தார்கள். முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்தின் பின்பு அந்த ஆதரவு தளம் முற்றாக வீழ்ச்சியடைந்தது.
முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை வீழ்ச்சியடைய செய்துவிட்டு மீண்டும் தங்களது ஆதரவு தளத்தினை கிழக்கில் எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்றே இரு தேசிய கட்சிகளும் சிந்திக்கின்றன.
இதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேரினவாத தலைவர்கள் விரும்புவதில்லை.,
இன்று சுதந்திர கட்சியின் தலைவர் பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கின்ற நிலையில், அக்கட்சியின் கிழக்கு மாகான முகவரான ஹிஸ்புல்லாஹ் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரத்தைக்கொண்டு இந்த காணிகள் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் வழமைபோன்று மு.கா தலைவர் செய்யாததனை ஹிஸ்புல்லாஹ் செய்துள்ளார் என்று போலியாக பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த விவகாரத்தில் மு.கா தலைவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது மு.கா தலைவர் பல வருடகாலமாக இந்த காணி விடுவிப்புக்கான போராட்டங்களும், அழுத்தங்களும் வழங்காது இருந்திருந்தால் இந்த வெறும் பன்னிரண்டு நாட்களுக்குள் இது சாத்தியப்பட்டிருக்குமா ?
பனம்பழத்தில் காகம் குந்த, பழம் விழுந்ததுபோன்று தெரியவில்லையா ?
எப்போதாவது முஸ்லிம் காங்கிரசிடம் காணி அதிகாரம் இருந்ததா ? ஆளுநர் பதவி மு.கா வசம் இருந்ததா ? அல்லது மு.கா தலைவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தாரா ?
இந்த நாட்டில் யார் எந்த பதவிகளை வகித்தாலும் உரிமையில்லாத சமூகமாகிய நாங்கள் சிங்கள அதிகாரிகளின் மனம் விருப்பமின்றி எதுவும் செய்ய முடியாது.
அதனால் ஹிஸ்புல்லாஹ் கட்டளையிட்டார் காணிகள் உடனே விடுவிக்கப்பட்டது என்பது அறிவுக்கு அப்பால்பட்ட விடயமாகும்.
எனவே அம்பாறை மாவட்டத்தின் மூவாயிரம் ஏக்கர் காணிகளில் 39 ஏக்கரை விடுவிக்க துணைபுரிந்த ஆளுநரை பாராட்டுவதோடு, மிகுதி 2961 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள முஸ்லிம்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்கின்ற பாரிய உதவியாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments:
Post a Comment