நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் போது கூடிய நாடாளுமன்ற அமர்வில் பெரும் மோதல் ஏற்பட்டதை அடுத்து அது குறித்து ஆராய்வதற்காக, ஏழு பேர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டது.
சபாநாயகர் கருஜயசூர்யாவால் இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமை தாங்குவதுடன், இந்த குழுவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை மற்றும் மோதல் குறித்த அறிக்கையினைச் சட்ட மா அதிபருக்கு அனுப்ப தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, பிரதி சபாநாயகர் இதனை கூறினார்.
இறுதியாக கூடிய இந்த குழுக் கூட்டத்தில் மோதல் குறித்த அனைத்து அறிக்கைகளையும் தயாரித்து வைத்துள்ளதாக தெரிவித்த அவர், சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் சட்டமா அதிபருக்கு இந்த அறிக்கையை அனுப்புதற்கான துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கியமை மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை மற்றும் மோதல்கள் குறித்து நாடாளுமன்ற காணொளிகள், வாக்குமூலங்கள் மற்றும் சொத்து சேத விபரங்களை மதிப்பீடு செய்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறினார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய நாடு திரும்பிய பின்னர், இந்த குழு தமது அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment