ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவுக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் சுமார் 58 வருடங்களாக நீடிக்கும் நிலையில், நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இது என்பது சிறப்பாகும். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்க, 4 நாட்கள் கொண்ட விஜயத்தை ஜனாதிபதி மேற்கொண்டு நேற்று இரவு பிலிப்பைன்ஸை சென்றடைந்தார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு பிலிப்பைன்ஸின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் வரவேற்பளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வரலாற்றுமிகு சந்திப்பு அமையவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிரசேன, மணிலாவில் உள்ள, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் சென்று அதன் தலைவர் தகெஹிக்கோ நகாப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாக பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளார்.
No comments:
Post a Comment