எதிர்க்கட்சிக்கான சலுகைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கவே கூடாது என, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தல் விடுத்துள்ளார். இன்றைய தினம் மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை கூறினார்.
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு எதிராக வாக்களித்தமை என பல்வேறு சாதனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிறைவேற்றியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, அமைச்சரவையின் முடிவுகளைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்தாலோசித்துதான் அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறியிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, சுமந்திரனோ, வடக்கு அபிவிருத்தி அமைச்சை தமது வேண்டுகோளுக்கு இணங்கவே ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டார் என்றுக் கூறி வருகின்றார்.
அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் இந்த அரசின் பங்காளியாகவே கருத வேண்டும். இப்படியானவர்களுக்கு இனியும் எதிர்க்கட்சியில் இருக்க எந்தவித தகுதியும் இல்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
இலங்கை வரலாற்றிலேயே இவ்வாறான ஒரு கட்சி இருந்ததில்லை. எனவே, நாடாளுமன்றத்தின்போது எதிர்க்கட்சி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும், எதிர்க்கட்சியாக விவாதத்தில் உரையாற்றவும் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடமளிக்க முடியாது என அவர் கூறினார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்விற்கு முன்னர் இதுதொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன், கலந்துரையாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசின் பங்காளியாக அங்கீகரிக்குமாறு தங்க கேட்டு கொள்ளவுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment