Wednesday, January 9, 2019

வெளிநாட்டு தூதுவர்களின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட அநுர

தூதுவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்பதுடன், தூதுவர்களின் பேச்சுக்களை கேட்டு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தூதுவர்களின் பேச்சுக்கு இணங்க, அரசாங்கம் செயற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். கடந்த காலங்களில் தேர்தல்கள் அனைத்தும் உரிய காலப்பகுதியில் எம்மால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன. ஜனநாயகம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் அரசாங்கத் தரப்பினர், தேர்தலை நடத்த முற்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஜனநாயகம் தொடர்பில் அக்கறை இருக்கிறது. அத்தோடு, தற்போது சில நாட்டு தூதுவர்கள் தமது அதிகாரத்துக்கும் மீறிய சில செயற்பாடுகளை மேற்கொள்வதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

நாடாளுமன்றில் குழப்பம் நடந்தபோது, கலரியைப் பார்வையிட வந்த சில தூதுவர்கள் கைத் தட்டுவதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இவர்களை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது? தூதுவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும். தூதுவர்களின் பேச்சுக்களை கேட்டு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

No comments:

Post a Comment