Monday, January 7, 2019

சமஷ்டி ஆட்சி - ஒற்றையாட்சி குறித்து விளக்குகிறார் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருமித்த நாடு என்று கூறிக்கொண்டிருப்பது ஒற்றை ஆட்சியே அன்றி, சமஷ்டி ஆட்சியல்ல என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, அவர் இதனை கூறினார். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறாக கையாண்டு, மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா, இதனால் நாடு பெரும் பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் நிலையை பற்றி கவனம் செலுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமது சுயநலன்களை நிறைவேற்றி கொள்ளவே, அதிக அக்கறை கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார். கிடைத்த சந்தர்ப்பங்களை தமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஒருமித்த நாடு என்பது சமஷ்டி என்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் ஒருமித்த நாடு என்பது ஒற்றையாட்சியே என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் டக்ளஸ் , சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு அரசியல் யாப்பு தொடர்பில் விளக்கம் இல்லையென சுமந்திரன் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment