Wednesday, January 30, 2019

கிண்ணியாவில் மேற்கொள்ளாட்ட கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு இராஜாங்க அமைச்சர் கண்டனம்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன வன்மையாக கண்டித்துள்ளார்.

மாலி தாக்குதலில் உயிரிழந்த இரு இராணுவ வீரர்களில் ஒருவர் பொலனறுவையை சேர்ந்தவராவார். அவரது பூதவுடல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி பொலனறுவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். அதனை தொடர்ந்து கிண்ணியா தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் தலையீட்டுடன் கிண்ணியாவில் இருந்த பதற்றம் தணிந்துள்ளது.

ஆனால், கடற்படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கே கடற்படையினர் அங்கு சென்றிருந்தனர். மாறாக பிரதேச மக்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கு அல்ல.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான தகவலையடுத்தே கடற்படையினர் அங்கு சென்றுள்ளனர். ஆனால், இருவர் அச்சத்தில் கடலுக்குள் பாய்ந்ததை தொடர்ந்தே, மக்களும் பதற்றமடைந்துள்ளனர்.

கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வின்போது அங்கு சென்ற கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த இருவர் அச்சத்தில் கடலில் குதித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாலியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் உடலத்தை தற்போது இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com