Thursday, January 3, 2019

இனப்பிரச்சினைக்கு நான்காம் திகதிக்குள் தீர்வு - சம்மந்தன் மீண்டும் நம்பிக்கை

2018ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தீர்வு என்று கூறியமை ஒரு நம்பிக்கை அடிப்படையிலேயே. ஆனால் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென நம்புகின்றோம் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.

தீபாவளிக்குள் தீர்வு என்று கூறிவந்த அவரிடம் இந்த தீர்வு விடயத்தில் ஒன்றும் நடைபெறவில்லையே என்றுவினவிய போதே இவ்வாறு பதிலளித்தார். தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் ஜனநாயகத்தை விரும்புகின்ற அனைத்து மக்கள், சிவில் அமைப்புக்கள் ஒருமித்து நாட்டில் பெரியதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மூவின மக்களின் விருப்போடு தெரிவாகிய அரசு தமது ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயரைச் சூட்டிக் கொண்டது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அரசமைப்பை உருவாக்கும் பணிகள் இலகுவாக நடைபெறவில்லை. சில அரசியல் சூழ்ச்சிகளால் அதில் தடங்கல்கள் ஏற்பட்டன. புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை முறியடிக்கும் வகையிலேயே அரசியல் சூழ்ச்சி அமைந்தது. எனினும், ஜனநாயக ரீதியில் அரசியல் சூழ்சியில் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி, புதிய அரசமைப்புக்கான வரைவு, அரசமைப்பு நிர்ணய சபையினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்று நம்புகின்றோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கட்சிகளை ஒன்றிணைத்து ஓரணியில் செயற்படுவோம் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


No comments:

Post a Comment