Wednesday, January 16, 2019

மத்தியால், மாகாண சபை அதிகாரங்களை மீளவும் பெறமுடியாது - சுமந்திரன் உறுதி

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மீண்டும் பெறமுடியாதவாறு புதிய அரசியல் அமைப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான M . A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை பருத்தித்துறை நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் M .A சுமந்திரனிற்கு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுக்கையில், “மாகாணசபைக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்கவேண்டும். மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. எனவேதான் நாம் இந்த விடயங்களை சமஷ்டிக்குரிய குணாம்சம் என்று கூறுகின்றோம். ஆகவே அரசியல் அமைப்பு மீறப்படுகின்றபோது அதனைத் தடுக்கவேண்டிய தேவை ஏனைய சமூகத்தைவிட தமிழ் சமூகத்திற்கு அதிகமாக இருக்கின்றது. இங்கு ஜனநாயகம் மீறப்படுகின்றபோது அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்தான். ஆனால் நாடு முழுவதும் பாதிக்கும்படி ஜனநாயகம் மீறப்படுகின்றபோது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவரது கடமையாகும் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com