Friday, January 18, 2019

''தமிழர்கள் ஒன்றும், கொண்டைக் கட்டிய சீனர்கள் அல்லர்'' - பொங்கியெழுந்த வேலுகுமார்.

தமிழர்கள் ஒன்றும், கொண்டைக் கட்டிய சீனர்கள் அல்லர் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற அரசியல் சார் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலுக்குமார் இதனை கூறினார்.

உத்தேச அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், ஒற்றையாட்சிக்குரிய முக்கிய அம்சங்களே அதில் உள்ளன என்று வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிதாக கொண்டு வரப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மஹிந்த அணியினர் விரும்பவில்லையா? என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்த மட்டுமல்லாது, மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்க வேண்டிய மகாநாயக்க தேரர்களே, புதிய அரசியலமைப்பை இனவாத நோக்கில் பார்ப்பது கவலையளிக்கின்றது. இதனால், நடுநிலை பார்வையை செலுத்தும் மகாநாயக்க தேரர்களின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூறியுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்ககூடாது என நினைக்கும் சிங்கள மேலாதிக்க தன்மை, ஒழியும் வரை நாட்டில் நிலையான சமாதானம் மலரப்போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, இலங்கையில் உள்ளக பொறிமுறையானது என்றுமே வெற்றியளிக்காது. என்பதை ஆகவே, சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதையே மஹிந்த அணியும், கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புக்களும் உணர்த்தி நிற்கின்றன.

ஐ.நா.வில் தமிழில் உரையாற்றியதாலும், பொங்கல் வாழ்த்துச் செய்தியை தமிழில் வெளியிடுவதாலும் தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிடலாம் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகாக்களும் பகல்கனவு காண்கின்றனர்.

அவர்களின் சிற்றின்ப அரசியலைக் கண்டு, பேரின்பம் அடையுமளவுக்கு தமிழர்கள் ஒன்றும் கொண்டைக்கட்டிய சீனர்கள் அல்லர்.

தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருந்தால், அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் கோரும் அரசியல் தீர்வை வழங்க எதற்காக தடை ஏற்படுத்த வேண்டும்?

போர் முடிவடைந்த பின்னர் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை, அன்று மஹிந்த அரசாங்கம் முன்னெடுக்காததால் தான் சர்வதேசத்தின் பிடிக்குள் இலங்கை சிக்கியது.

தமிழ் மக்களின் மனங்களில் மஹிந்த இடம்பெற வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முழு பங்களிப்பையும் வழங்கவேண்டும் வேலுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment