Friday, January 11, 2019

எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது! கூறுகின்றார் ஈபிடிபி தவராசா.

தமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் அடக்கி ஆண்டு வருவதாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என சரணாகதி அரசியல் செய்யும் ஈபிடிபி எனும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் சி. தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியடியில் 45ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது. ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் இந்த உலகத்தை ஆண்டனர். ஆனால் இன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றது. இந்த நிலையிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எம்மை மாற்றி, எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றபோது கொழும்பில் குண்டு துளைக்காக வாகனங்களிலும், வடகிழக்கெங்கும் இராணுவத்தின் கவச வாகனங்களிலும் அப்போராட்டத்தை தோற்கடிப்பதற்கு திரிந்தவர்கள் ஈபிடிபி யினர். புலிகளின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றபோது , அது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்லவென்றும் பயங்கரவாதம் என்றும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படையாக கூறிவந்த அந்த கட்சியின் உறுப்பினர் தற்போது, புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை ஏற்க மறுக்கின்றார்.

புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்டுவிட்டதாக தவராசா கூறுகின்றார். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.

ஈபிடிபி க்கு கொழும்பில் சந்திரிகாவால் வழங்கப்பட்டுள்ள வீடு ஒன்றில் தனக்கும் பங்குண்டு என அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டு ஈபிடிபி யிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சரணடைய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் தவராசா மீண்டும் ஈபிடிபி யுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஈபிடிபி யை ஏமாற்றுகின்றது அடக்கி ஆளுகின்றதென கூறுகின்ற ஈடிபிடி உறுப்பினரிடம் கேட்கப்படுகின்ற கேள்வி யாதெனில், அவ்வாறாயின் அதற்காக அந்த அரசாங்கங்களின் வாசற்படியில் அமைச்சுப்பதவிக்காக காவல் இருக்கின்றீர்கள்? அடக்குகின்ற அரசுடன் எவ்வாறு உங்களால் கூட்டாட்சி நடாத்த முடியும்?

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிடைக்கப்பெற்ற அமைச்சகத்தில் கடை நாள்வரை நின்று காரியாலய குப்பைகளை தவராசாவே ஒதுக்கியதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கைநெட்க்கு தெரிவித்தார்.

இவ்வாறு நிலைமை இருக்கின்றபோது, தொடர்ந்தும் தமது அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை எவரும் இனவாதத்தினை நோக்கி நகர்த்த அனுமதிக்க முடியாது.

தவராசாவின் சந்தர்ப்பவாத அரசியலின் பக்கங்கள் பலவுள்ளன. இவர் கொழும்பில் ஈபிடிபி முகாமில் இருந்து கொண்டு கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் பிரதான புலிச் சந்தேக நபருக்கு உதவி புரிந்தார் என சீஐடி யினரால் தேடப்பட்டபோது, பிரித்தானியாவுக்கு தப்பியோடியிருந்தார்.

அவ்வாறு லண்டனுக்கு தப்பியோடிய தவராசாவை விசாரணைகள் ஆரம்பித்து நீதிமன்று கோரும்பட்சத்தில் தான் நாட்டுக்கு கொண்டுவந்து தருவேன் என டக்ளஸ் தேவானந்தா லண்டன் பிபிசி க்கு தெரிவித்திருந்தார். ஆனால் பிரித்தானியாவுக்கு தப்பியோடிய தவராசா தன்னை டக்ளஸ் தேவானந்தாவும் கொல்ல முயற்சிப்பதாக அரசியல் தஞ்சம் கோரியிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த சம்பவம்தொடர்பாக தவராச முற்றாக விடுபட்டுள்ளாரா? அது நீதிமன்றின் நேரிய வழிமுறைகளுடாகவா அன்றில் பின்கதவு டீலா என்பது தொடர்பில் பழைய கோப்புக்கள் தூசி தட்டப்படவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.



No comments:

Post a Comment