தனக்கும் இலஞ்சம் கொடுத்து, இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்களை இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறினார்.
இலங்கை அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கு இலஞ்சம் தருவதாக என்னை அணுகியிருந்தார்கள். எனவே குறித்த விடயம் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலுக்கு அறிவித்தேன். அவர் உடனே தலையில் கையை வைத்துக் கொண்டார்.
இவ்வாறு என்னிடம் கேட்ட போது நானும் தலையில் கை வைத்தேன். அப்போது தான் என்னையும் இந்த சதியில் சிக்கவைப்பதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என நினைத்தேன். அதன் பிறகுதான் எண்ணினேன் இதற்கு முன்னரும் இவ்வாறு தான் நடந்திருக்கும்.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கே இலஞ்சம் வழங்க முற்பட்டமை ஊடாக, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் எந்தளவிற்கு ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றது என்பதை உணர முடிகின்றது.
இதேநேரம். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் பல தகவல்களை ஐ.சி.சி இன் அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதேபோன்று, எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுகின்ற வீரர்களுக்கு தண்டணை வழங்குவதற்கான புதிய சட்டமூலமொன்றை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.
அத்துடன், கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரத்தில் கிரிக்கெட் யாப்பை மாற்றுவதற்கான குழுவொன்றையும் நியமித்து அதையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளேன்.
இதேவேளை, இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், உண்மையில் ரொஷான் மஹானாம தலைமையில் இடைக்கால நிர்வாக சபையை நியமிக்கவே எண்ணியிருந்தேன்.
எனினும் ஐ.சி.சி இதற்கு அனுமதி வழங்காத காரணத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment